
வேலூரை சேர்ந்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஜி.ஜி ரவிக்கு மணல் குவாரி உரிமம் பெற்று தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் உறவினர் இராவணன் வேலூர் சத்துவாச்சாரி ஜே.எம் 2 நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
வேலூர் மாநகராட்சி முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜி.ஜி. ரவி. இவர் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக உள்ளார்.
இந்நிலையில், மணல் குவாரி ஒப்பந்தம் பெற அமைச்சர் செங்கோட்டையனின் முன்னாள் உதவியாளர் ஆறுமுகத்திடமும், சசிகலா உறவினர் ராவணனிடமும் ஜி.ஜி. ரவி ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மணல் குவாரி ஒப்பந்தம் பெற்றுத் தராமல் மேலும் 3 கோடி ரூபாய் கேட்டதாகவும், பணத்தை திரும்ப கேட்டதற்கு தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ரவி வேலூர் எஸ்.பி. கயல்விழியிடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் ராவணன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் டிஎஸ்பி ராமேஸ்வரி வழக்கு பதிவு செய்தார்.
இதுகுறித்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஜே.எம் 2 நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் முதல் குற்றவாளியான சசிகலாவின் உறவினர் ராவணன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.