ருசிக்கு ஆசைப்பட்டு காட்டுப் பன்றியை வேட்டையாடி கொன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்...

First Published Feb 14, 2018, 6:57 AM IST
Highlights
Rs 10 thousand fine for who hunt wild boar Forest Department Warning ...


தருமபுரி

தருமபுரியில் காட்டுப் பன்றியை வேட்டையாடி சிறு சிறு துண்டுகளாக்கி எடுத்து சென்றபோது சிக்கியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர்  அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரக பகுதியில் வனச்சரக அலுவலர் செல்வம் தலைமையில் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த  சோதனையில் வனவர் வி.வெங்கடேசன், வனக்காப்பாளர்கள் கே.சங்கர், சண்முகம், என்.சின்னசாமி மற்றும் வனக்காவலர் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு ஈடுபட்டு இருந்தது.

அப்போது, பிக்கனஅள்ளி சரக பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதனை சிறு சிறு துண்டுகளாக பாத்திரத்தில் வைத்து எடுத்துச் சென்றுக் கொண்டிருந்த வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி (33) என்பவரை பிடித்தனர். வேட்டையாட பயன்படுத்திய அரிவாளையும் அவர்கள் கைப்பற்றினர்.

இது தொடர்பாக சின்னசாமி மீது வழக்குப்பதிந்த வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின்பேரில் சின்னசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அந்த அபராத தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர், மாவட்ட வன அலுவலர், "காப்புக்காடுகளில் நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார். 

click me!