மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Madurai Rowdy Shot Dead in police encounter: மதுரை அருகே போலீஸ் நடத்திய என்கவுண்ட்டரில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மதுரையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் இந்த சுபாஷ் சந்திரபோஸ். மதுரை திருமங்கலம் அருகே தனக்கன்குளம் மொட்டமலை பகுதியை சேர்ந்த ரவுடி காளீஸ்வரன் தனது வீட்டின் வெளியே வைத்து 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார்.
மதுரை ரவுடி சுபாஷ் சந்திரபோஸ்
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்த நிலையில், கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த கொலையில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ்க்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீஸ் தேடுதல் வேட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் மதுரை ரிங் ரோடு அருகே வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் என்வுண்ட்டரில் சுட்டுக்கொலை
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சுபாஷ் சந்திரபோஸை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகின.
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் விளக்கம்
ரவுடியை என்கவுண்ட்டர் செய்தது குறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் கூறுகையில், ''மதுரையில் ரவுடி கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் சுபாஷ் சந்திரபோஸ்க்கும் தொடர்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து தான் இவர் சென்ற காரை போலீஸ் வழிமறித்தபோது, அவர் அரிவாளால் 2 காவலர்களை வெட்டியுள்ளார். இதனால் அவர்கள் தற்காப்புக்காக சுபாஷ் சந்திரபோஸ் காலின் தான் சுட்டனர். ஆனால் அவர் குனிந்து விட்டதால் மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்து விட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் என்கவுண்ட்டர்
தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அண்மைகாலமாக போலீசார் என்கவுண்ட்டர்கள் மூலம் குற்றவாளிகள், ரவுடிகளை சுட்டுக்கொல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் காவலரை அடித்துக் கொன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இன்று மதுரையில் ரவுடி என்கண்ட்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.