திண்டுக்கல்லில் வருடத்திற்கு 5925 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது – ஆட்சியர் அறிவிப்பு…

First Published Sep 21, 2017, 8:55 AM IST
Highlights
Rota antiviral drug for 5925 children per year in Dindakkal - Collector ...


திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஓராண்டுக்கு 5925 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது என்று ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சி கமலாநேரு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு, ரோட்டா வைரஸ் தடுப்புச் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைப்பெற்றது.

இதில் ஆட்சியர் டி.ஜி.வினய் பங்கேற்று ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அவர், “இந்தியாவில் 40 சதவீத குழந்தைகள் ரோட்டா வைரஸ் கிருமி தொற்றால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். அதைத் தடுக்கவே ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உலக அளவில் 81 நாடுகளில் ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் மட்டுமே ரோட்டா வைரஸ் மருந்து வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கடந்தாண்டு அரியானா, இமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அரசு மூலம் ரோட்டா வைரஸ் மருந்து வழங்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அசாம், திரிபுரா மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையங்கள், நகர் நல சுகாதார மையங்களில் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்படும்.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 6, 10, 14–வது வாரங்களில் தலா ஐந்து சொட்டுகள் வீதம் மருந்து வழங்கப்படும். இதேபோல் தொடர்ந்து வழங்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஓராண்டுக்கு 5925 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது.

கமலாநேரு மருத்துவமனை, மரியநாதபுரம், சவேரியார்பாளையம், பழனி சாலை நகர்நல சுகாதார நிலையங்கள், அவற்றை சேர்ந்த அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

click me!