சங்கு ஊதி தமிழக அரசை எழுப்பும் சாலை பணியாளர்கள்; தனியார் மயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்...

First Published Jun 12, 2018, 6:59 AM IST
Highlights
Road workers demonstration against privatization ...


தஞ்சாவூர் 

நெடுஞ்சாலை பராமரிப்பு பணியினை தனியாரிடம் வழங்கும் முடிவை கைவிட வேண்டும் என்று சங்கு ஊதி தமிழக அரசை எழுப்பி சாலை பணியாளர்கள் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், பனகல் கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேனன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் மலைஇளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப் பலன் வழங்க வேண்டும். 

சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கிணையான ஊதியம் வழங்க வேண்டும்.

மாத ஊதியம், கருவூலம் மூலம் நிரந்த ஊதிய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலை பராமரிப்பு பணியினை தனியாரிடம் வழங்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். 

பொள்ளாச்சி, இராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், பழனி கோட்ட சாலைகளை தனியார் நிறுவனத்திடம் பராமரிப்பிற்காக விடப்பட்டதை திரும்ப பெற வேண்டும். 

பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாலைப் பணியாளர்கள் கருப்பு கொடியேந்தி, சங்கு ஊதி தமிழக அரசை எழுப்பும் விதமாக முழக்கங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் திரவியராஜ் நன்றி தெரிவித்தார்.

click me!