சௌபா இறப்புக்கு சிறை அதிகாரிகளின் சதியே காரணம்! சென்னை பத்திரிகையாளர் சங்கம் குற்றச்சாட்டு

 
Published : Jun 11, 2018, 05:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
சௌபா இறப்புக்கு சிறை அதிகாரிகளின் சதியே காரணம்! சென்னை பத்திரிகையாளர் சங்கம் குற்றச்சாட்டு

சுருக்கம்

The conspiracy of prison officers is due to the death of Sowba - Chennai Union of Journalists

எழுத்தாளர் சௌபாவின் மறைவில் சிறை அதிகாரிகளின் சதியே காரணம் என்பது தெரிவதாகவும், அவரது மறைவு தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சௌபா என்ற சௌந்திரபாண்டியன் மதுரை கோச்சடை டோக் நகரில் வசித்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி
லதாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். இவரது ஒரே மகன் விபின். இவர் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் படிப்பு முடித்துள்ளார். 

எங்கும் வேலைக்கு செல்லாததால் தந்தை அல்லது தாயுடன் மாறி மாறி வசித்து வந்தார். சில நாட்களாக விபினை பார்க்கவில்லை என்று லதா எழுத்தாளர்
சௌபாவிடம் கேட்டுள்ளார். ஆனால் சௌபா தனக்கு விபின் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் மகனைக் காணவில்லை என்றும் அது
தொடர்பாக கணவர் சௌபா மீது சந்தேகம் இருப்பதாக கடந்த மே 5 ஆம் தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக போலீசார் சௌபாவிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் விபினை பற்றி எனக்கு தெரியாது என்று சொல்லி வந்த சௌபா பிறகு மகனை
போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் விபினைச் சேர்த்ததாகக் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை சௌபாவிடம் தீவிர விசாரணை
மேற்கொண்டனர். விபினின் செல் போனும் சௌபாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. 

மேலும் சந்தேகம் வலுக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலில் மறுத்து வந்த சௌபா பின்பு விபின் தினமும் குடித்து விட்டு சொத்து கேட்டு தகராறு
செய்ததால் ஆத்திரத்தில் கம்பியால் அடித்ததாகவும், இதில் விபின் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். யாருக்கும் தெரியாமல் உடலை கொடை ரோட்டில்
இருக்கும் அவரது தோட்டத்தில் எரித்து, சாம்பலை 10 அடி ஆழத்தில் புதைத்துவிட்டதாக தெரிவித்தார்.

செளபா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய தோட்டத்தில் வேலை செய்த இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து மதுரை மத்திய
சிறையில் சௌபா அடைக்கப்பட்டார்.

 அவருக்கு சர்க்கரை நோய் இருந்து வந்தது. நோய் முற்றியதையடுத்து செளபா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவர் இன்று காலை மரணமடைந்தார்.

இந்த நிலையில், சௌபா மறைவு தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளது.

அதில், சிறையில் இருந்த சௌபா, சர்க்கரை நோயால் அவரது கால் மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்டு மூன்று நாட்கள் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சௌபாவை, அரசு டாக்டர்கள் விடுவிக்க மறுத்தும், வலுக்கட்டாயமாக மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இரண்டு நாட்களுட்ககு முன்பு சௌபாவின் உடல்நிலை மோசமாக, அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். சிறையில் கால் அகற்றப்பட்டதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் சௌபா இன்று விடியற்காலை இறந்து போனார்.

அறுவை சிகிச்சை செய்து மூன்று நாட்களில் சிறைக்கு கொண்டு சென்று, சௌபாவின் மறைவில் சிறை அதிகாரிகளின் சதியே காரணம் என்று தெரிவதாக பத்திரிக்கையாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சிறைத்துறை உயர் அதிகாரிகள் சௌபா மறைவு தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

என்ன ஒரு தைரியம்! கடலுக்குள்ள 20 அடி ஆழத்துல பரதநாட்டியம் ஆடிய புதுச்சேரி சுட்டி!
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு