மணியரசனை தாக்கியது ஏன்? உண்மையில் நடந்தது என்ன? வெளியான திடுக் தகவல்...

First Published Jun 12, 2018, 6:18 AM IST
Highlights
Why maniyarasan attacked? really what happened? Release info ...


தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் ஏன் நடந்தது? என்று காவலாளர்கள் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பெ.மணியரசன். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவருமாக இருக்கிறார். 

நேற்று முன்தினம் இரவு இவர், தஞ்சாவூர் கலைஞர் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தஞ்சை இரயில் நிலையத்திற்குப் புறப்பட்டார்.

மோட்டார் சைக்கிளை சீனிவாசன் என்பவர் ஓட்டிவந்தார். மணியரசன் பின்னால் அமர்ந்து வந்தார். 

தஞ்சை நட்சத்திர நகர் அருகே வந்தபோது இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், திடீரென மணியரசனின் வலது கையை பிடித்து இழுத்தனர். இதில் நிலை தடுமாறிய மணியரசன், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

பின்னர், அவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதைப் பார்த்தவுடன் இரண்டு மர்ம நபர்களும் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக புதிய பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றுவிட்டனர். 

காயமடைந்த மணியரசன், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வந்து விசாரணை நடத்தினார். அப்போது மணியரசன் தனது கையில் வைத்திருந்த கைப்பையை அந்த மர்ம நபர்கள் பிடுங்கிச் சென்றதாக தெரிவித்தார். 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் குறித்த அடையாளம் தெரிகிறதா? என விசாரிக்க காவலாளர்களுக்கு உத்தரவிட்டார். 

அதன்படி காவலாளர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது மணியரசனை தாக்கி, அவரிடம் இருந்த கைப்பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களின் வண்டி எண்ணை பார்த்தனர். அதே வண்டி எண் மற்ற கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்றும் பார்த்தனர்.

அப்போது தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர் நகரில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் அந்த இரண்டு மர்ம நபர்களும் செயினை பறிக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவலாளர்கள், அந்த வண்டி எண்ணை பார்த்தனர். 

இதில் மணியரசனை தாக்கி கைப்பையை பிடுங்கிய வாகன எண்ணும், ஆர்.ஆர் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி செய்த வாலிபர்கள் சென்ற வாகன எண்ணும் ஒன்று என்று தெரியவந்தது.

இதனையடுத்து மணியரசனை கொலை செய்யும் நோக்கோடு அந்த வாலிபர்கள் வரவில்லை என்பதும், மணியரசன் வைத்திருந்த கைப்பையை பிடுங்க சென்றபோது அவர் தாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. 

மணியரசன் வைத்திருந்த கைப்பையில் ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, டேப் ரெக்கார்டர், ரூ.700 ஆகியவை இருந்துள்ளது. 

இதுகுறித்து தஞ்சை தெற்கு காவலாளர்கள், வழிப்பறி கொள்ளை என வழக்குப் பதிவு செய்து மணியரசனை தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!