
சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில், பிராட்வேயிலிருந்து வடபழனி சென்ற 25 பி, என்ற எண்ஷள்ள சென்னை மாநகர பேருந்தும் ஒரு காரும் சிக்கிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணா சாலையில் தற்போது மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த சாலையில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதைக்கான கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த திட்டப்பணிகள் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாசாலையின் இதே பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளம் உடனடியாக மூடப்பட்டது.
தற்போது இந்த இடத்திற்கு அருகே மீண்டும் புதிய பள்ளம் உருவாகி, அந்த பள்ளத்தில் பேருந்தும் , காரும் கவிழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரில் சென்ற இளைஞர் ஒருவர் திடீரென தான் ஓட்டி வந்த கார் பூமிக்குள் சென்றதாக தெரிவித்தார். நல்ல வேளையாக அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டதாகவும், தன் காரைவிட்டு வெளியேறியதும், அந்த கார் மேலும் சில அடிகள் உள்ளே சென்றதாகவும் தெரிவித்தார்.
அண்ணா சாலை திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்திற்குள்ளான பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அண்ணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.