
திருவாரூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி திருவாரூரில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 52 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
"புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும்.
7-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும்" உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வந்தன.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து மறியல் போராட்டத்தை தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்கள் கழக மாவட்ட தலைவர் அன்பரசு, தமிழ்நாடு தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் நலங்கிள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட 52 ஆசிரியர்களை கைது செய்தனர்.