பொதுமக்களை ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த ஆரூத்ரா நிறுவன இயக்குனரிடம் பணம்பெற்ற குற்றச்சாட்டில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
ஆரூத்ரா- பல ஆயிரம் கோடி மோசடி
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம், முதலீடு செய்த ஒரு லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ 36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.
undefined
ஆனால் உரிய முறையில் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ 96 கோடி முடக்கப்பட்டது.
பாஜக நிர்வாகிக்கு தொடர்பு
இந்த வழக்கில் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஆருத்ரா நிறுவன மோசடியில் கைதான ஹரீஷ், தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். மேலும் நடிகரும் தயாரிப்பாளருமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 15 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அவரையும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் பல மாதங்களாக ஆர்.கே.சுரேஷ் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார்.
விசாரணைக்கு ஆஜரான ஆர்.கே.சுரேஷ்
அப்போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஆர்.கே. சுரேஷை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்ததாக தெரிவித்ததால் ஆர்.கே.சுரேஷை குடியுரிமைத்துறை அதிகாரிகள் விடுவித்தனர். இதனையடுத்து இன்று காலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது ஆரூத்ரா நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றது தொடர்பாக கேள்வி எழுப்பப்படவுள்ளது. மேலும் இந்த பணம் யாருக்கெல்லாம் கொடுத்தீர்கள், வெளிநாடு சென்று தலைமறைவாக இருப்பது ஏன் என கேள்விகள் எழுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்படுவாரா ஆர்.கே.சுரேஷ்
பண மோசடி தொடர்பாக பொருளாதார போலீசார் விசாரணைக்கு பிறகு ஆர்.கே.சுரேஷ் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் ஆர்.கே.சுரேஷ் கைது செய்யப்பட வாய்ப்பில்லையென்றும், கைது செய்ய நீதிமன்றத்தில் தடை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்று ஆர்.கே.சுரேஷ் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்