
கன்னியாகுமரி
திருவனந்தபுரத்தில் பாஜ.க கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு கன்னியாகுமரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தின் மீது கல்வீசியும், நினைவு தூணை உடைத்தும் பழிவாங்கும் படத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவலாளர்கள் தேடிவருகின்றனர்.
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் புகுந்த இருவர் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்கியதற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், சீதாராம் யெச்சூரியை தாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் இரவு கேரளாவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க. கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இந்தத் தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான பா.ஜனதா கட்சி தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனால் திருவனந்தபுரத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தால் நேற்று முன்தினம் இரவு முதல் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளை பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதனிடையே நேற்று அதிகாலை கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சாளரக் கண்ணாடிகள் உடைந்தன.
இதேபோல் செம்மங்காலை சந்திப்பில் இருந்த கம்யூனிஸ்டு தியாகிகள் நினைவு தூணை நள்ளிரவில் மர்ம கும்பல் அடித்து உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வருவதைகண்டதும் அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. உடனே அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.
அருமனை காவலாளர்களும் அங்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். தக்கலை உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்வையிட்டார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை விரைவில் பிடிப்பதா தெரிவித்தார்.
மேல்புறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.