
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர். இதில் பெண்கள், குழந்தைகள் பெரும்பாலானோர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தவெகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் தவெகவினர் மீது பல்வேறு கேள்விகளை முன்வைத்து அவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
அதாவது ''தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய்யும், தவெக நிர்வாகிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் உதவி செய்யாமல் தலைமறைவாகி விட்டனர். என்ன மாதிரியான கட்சி இது'' என்று நீதிபதி செந்தில் குமார் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
நீதிபதியின் கருத்தால் ஆத்திரம் அடைந்த தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் அவரை தனிப்பட்ட முறையிலும், அவரின் குடும்ப பின்னணியை வைத்தும் விமர்சனம் செய்தனர். இது மட்டுமின்றி பத்திரிகையாளர் மாரிதாஸ் உள்ளிட்ட சிலரும் நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
அதன்பேரில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் நீதிபதியின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தார்.
காவல்துறை முன்னாள் அதிகாரி கைது
நீதிபதியை விமர்சிப்பவர்களை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து தட்டித் தூக்கி வருகிறது. அந்த வகையில் நீதிபதி செந்தில்குமாரை விமர்சித்த தவெக, அதிமுகவை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், நீதிபதி செந்தில்குமாரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவரை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். நேதாஜி மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் வரதராஜன் நீதிபதியை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதன்படி அவரை காவல்துறையினர் தட்டித்தூக்கியுள்ளனர்.
விமர்சனங்களுக்கு நீதிபதியின் பதில் என்ன?
நீதிபதியை விமர்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக தன் மீதான விமர்சனம் குறித்து நீதிபதி செந்தில் குமார் கருத்து தெரிவித்து இருந்தார்.
''இப்போது சமூகவலைத்தளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கின்றனர். நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தால் அவர்கள் குடும்பங்களையும், தனிப்பட்ட முறையிலும் கடுமையாக விமர்சிக்கின்றனர்'' என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.