வயநாட்டை நோக்கி லாரி லாரியாக படையெடுக்கும் நிவாரணப் பொருட்கள்; நீலகிரி மக்களின் பரந்த மனசை பாருங்க!

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 22, 2018, 8:02 AM IST
Highlights

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலம் வயநாட்டிற்கு லாரி லாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
 

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலம் வயநாட்டிற்கு லாரி லாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

கேரளாவில் பொழிந்த பலத்த மழைக்கு வயநாடு, இடுக்கு உள்பட 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இவர்கள் இராணுவம், தன்னார்வலர்கள் மற்றும் மற்ற மாநில பொதுமக்களால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கைப் பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர். நேற்று தி.மு.க. சார்பில் ஆண்கள் மற்றூம் பெண்களுக்கான துணிகள், செருப்புகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என மொத்தம் ரூ.2 இலட்சம் மதிப்பில் சரக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். 

இதேபோன்று, குன்னூர் பெரியவண்டிச்சோலை கிராம மக்கள், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சர்க்கரை, அரிசி, பருப்பு மற்றும் உணவுப் பொருட்களை நீலகிரி மாவட்ட நிர்வாகத்தினரிடம் கொடுத்து அனுப்பினர். 

இதேபோல நீலகிரி மோட்டார் வாகன ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில், 2 டன் அரிசி, 200 கிலோ சர்க்கரை, 200 கிலோ பருப்பு, காய்கறிகள், தண்ணீர் புட்டிகள், ஆடைகள், மளிகைப் பொருட்கள், போர்வை, கம்பளி, குடங்கள், பாய்கள், குழந்தைகளுக்குத் தேவையானப் பொருட்கள், மருந்துகள் என மொத்தம் இரண்டரை இலட்சம் மதிப்பில் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

அவையனைத்தும் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்க வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.  இதேபோல கோத்தகிரி வியாபாரிகள் சங்கம், மர வியாபாரிகள் சங்கம், தேயிலைத் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடம் இருந்து அரிசி, சர்க்கரை, மளிகைப் பொருட்கள், உடைகள், பால்பொடி, தண்ணீர் போன்றவற்றை சேகரித்து கோத்தகிரி காமராசர் சதுக்கத்தில் வைத்தனர். அங்கிருந்து அவை வயநாடு ஆட்சியரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன.

click me!