
கடலூர்
ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடலூரில் மீனவ அமைப்பினர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவ அமைப்பினர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "கடலூர் மீனவ கிராமங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள் கன்னியாகுமரியிலிருந்து மீன் பிடிக்கச் சென்றவர்கள் மாயமாகியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால், எந்தவித பயனுமில்லை.
அரசிடம் நிவாரணம் கேட்டால் மாயமானவர்கள் 7 ஆண்டுகளாகியும் கிடைக்கவில்லை என்றால்தான், இறந்தவர்களாகக் கருதி நிவாரணம் வழங்க முடியும் என்று கூறுகின்றனர்.
கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் கரை திரும்பிவிடுவர்.
இந்த முறை அவ்வாறு கரை திரும்பாத மீனவர்களை இறந்ததாகக் கருதி, அவர்கள் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமும், நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் கோரி இருந்தனர்.