
கடலூர்
ஆளுநரின் ஆய்வு மாவட்டந்தோரும் தொடர்ந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ்ணன் கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறதா? இல்லை என்று நினைத்து ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
ஆளுநரின் ஆய்வு மாவட்டந்தோரும் தொடர்ந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
என்எல்சி நிறுவனத்தில் அனைத்துப் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை நிர்வாகம் செய்கிறது. தனியார் நிறுவனத்தினர் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த கூலிக்கு ஆள்களை அழைத்து வந்து வேலை வாங்குகிறார்கள். இப்படி செய்தால், கடலூர் மாவட்ட, தமிழக இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? என்று புரியவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் பொதுத் துறை நிறுவனம் இயங்கி வருகிறது.
ஓகி புயலுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தால் ஒரளவுக்கு உயிர்ச் சேதத்தைத் தவிர்த்திருக்க முடியும். கடந்த திமுக ஆட்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு 3400 வாக்கி - டாக்கி சாதனங்கள் வாங்கப்பட்டன. ஆனால், கோபுரம் பழுதாகி செயல்படவில்லை.
தற்பொழுது 20,000 ஆயிரம் வாக்கி - டாக்கிகள் ஓராண்டுக்கு முன்பே வாங்கி வைத்துள்ளனர். ஆனால், இது செயல்பட வேண்டுமானால் 17 டவர்கள் அமைக்க வேண்டும். இதற்கு டெண்டர் விடும் பணியை தற்போதுதான் தொடக்கியுள்ளனர். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
தொழில்சாலை கழிவுகள் வங்கக் கடலில் கலப்பதால் மீன் வளம் குறைந்துள்ளது. இதனால்தான் மீனவர்கள் அரபிக் கடலை நாடிச் செல்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. விருத்தாசலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக கண்ணகி, முருகேசனை எரித்து கொலை செய்த வழக்கை சிபிஐ நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் காவல் அதிகாரிகள் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாட்சிகளை மிரட்டி வருகின்றனர். நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய செல்வராசு முதல் நாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் சாட்சிகளை மறு விசாரனை செய்ய வேண்டும்.
அதேபோல, நெய்வேலி காவல் நிலையத்தில் சுப்பரமணி உயிரிழந்த வழக்கில் அவரது மனைவிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ரு அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், ஜி.மாதவன், பி.கருப்பையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.