
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளதால் நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 40 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளதால், பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை திறக்கப்பட உள்ளது. தற்போது கொரோனா பரவல் கனிசமாக குறைய தொடங்கி உள்ளது. ஆகையால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டது. முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19ல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா மூன்றாம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததையடுத்து நாளை முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையை மாற்றி தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆவது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16 ஆம் தேதி வரையிலும், 2 ஆவது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.