
தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக, அந்தந்த மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு , அதன்மூலம் நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு நெல்கொள்முதல் செய்ய கால தாமதம் ஏற்படுவதால், விவசாயிகள் முன்னதாகவே இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறையை கடந்த ஆண்டு அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்மூலம் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தால் , விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் காலநேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும். இதன் பயனாக விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல், தங்களது நெல்லை விற்பானை செய்துகொள்ளலாம் என அரசு தெரிவித்தது.
ஆனால் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கிராமப் புறங்களில் இ-சேவை மையங்கள் இல்லாததால் பல விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்ய முடியாமம் சிரமங்களை சந்திப்பதாக கூறப்பட்டது. இந்த தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து தற்போது, விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய அந்தந்த மாவட்டங்களில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு செய்யப்படும் என நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து சுற்றறிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை எளிதில் விற்பனை செய்திட இணையவழி பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 01.01.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி இணைய வழி பதிவு முறையின் மூலம் விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்து உடனுக்குடன் டோக்கன் வழங்கி முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்திட சம்பந்தப்பட்ட பட்டியல் எழுத்தர்கள், கொள்முதல் அலுவலர்கள் மற்றும் துணை மேலாளர்கள் (கொள்முதல் & இயக்கம்) அவர்களுக்கு அறிவுறுத்துமாறு முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.