கொரோனா லாக்டவுனால ஒரு குட் நியூஸ். இந்த முறை போகி பண்டிகையில் காற்று மாசின் அளவு குறைவு..

By Thanalakshmi VFirst Published Jan 13, 2022, 9:00 PM IST
Highlights

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வின்படி காற்று தரக் குறியீடு மாசின் அளவு  கடந்த போகிப் பண்டிகையை விட நடப்பாண்டு மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''போகிப் பண்டிகையின்போது சென்னை பெருநகர மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினைக் கண்காணிப்பு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வகத்தின் மூலம் போகிப் பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப் பண்டிகை அன்று 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத் தரத்தினைக் கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்யப்பட்டது. 

இந்த ஆய்வின்படி 12.01.2022 காலை 8 மணி முதல் 13.01.2022 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு, மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராம்/ கனமீட்டருக்கு உட்பட்டு இருந்தது.

காற்றில் கலந்துள்ள (PM2.5) நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 18 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் அதிகபட்சமாக 54 மைக்ரோகிராம்/ கனமீட்டர் வரை இருந்தது. (நிர்ணயிக்கப்பட்ட PM2.5 தர அளவு 60 மைக்ரோகிராம்/ கனமீட்டர்). மேலும், காற்றில் கலந்துள்ள (PM10) நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 45 மைக்ரோகிராம்/ கனமீட்டர் முதல் 91 மைக்ரோகிராம்/ கனமீட்டர் வரை இருந்தது. (நிர்ணயிக்கப்பட்ட PM10 தர அளவு 100 மைக்ரோகிராம்/ கனமீட்டர்).

காற்று தரக் குறியீடு (Air Quality Index) பொருத்தமட்டில் குறைந்தபட்சமாக தேனாம்பேட்டையில் 61 ஆகவும் (திருப்திகரமான அளவு) அதிகபட்சமாக மாதவரத்தில் 91 ஆகவும் (திருப்திகரமாண அளவு) இருந்தது அறியப்பட்டது. கடந்த ஆண்டு (2021) போகிப் பண்டிகையின்போது காற்று தரக் குறியீட்டு அளவுகள் சென்னை பெருநகர மாநகராட்சியின் பதினைந்து மண்டலங்களில் 12 மண்டலங்களில் மிதமான அளவுகளிலும் மீதமுள்ள 3 மண்டலங்களில் மோசமான அளவுகளாக இருந்தது. நடப்பாண்டில் (2022) போகிப் பண்டிகையின்போது சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் காற்று தரக் குறியீடு திருப்திகரமான அளவுகளிலேயே இருந்தது என்று கண்டறியப்பட்டது. (காற்று தரக் குறியீட்டு அளவு 51 முதல் 100 வரை).

அதே போல் விமானப் போக்குவரத்து தடைப்படவில்லை. தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு அறிக்கையின்படி இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவு வெளியில் வராத காரணத்தால் போகிப் பண்டிகையின்போது மாசின் அளவு கடந்ந ஆண்டை (2021) விட நடப்பாண்டு (2022) வாரியத்தின் ஆய்வின்படி காற்று தரக் குறியீடு மாசின் அளவு (Air Quality Index) மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!