நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... ஜன.19ல் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!!

By Narendran SFirst Published Jan 13, 2022, 8:43 PM IST
Highlights

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், ஜனவரி 19 ஆம் தேதி  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், ஜனவரி 19 ஆம் தேதி  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. தென்காசி உள்பட 9 மாவட்டங்கள் புதிதாக உருவானதால் அந்த மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தது. புதிதாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு வார்டுகள் பிரிக்கும் பணி நடந்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைந்து முடிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.

இதையடுத்து வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதை அடுத்து கடந்த 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில  தேர்தல் ஆணையம், ஜனவரி 19 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும், தேர்தல் ஆணையர் தலைமையில் ஜனவரி 19 ஆம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. 

click me!