Tamilnadu Rain | தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்… கொட்டித் தீர்த்தது 14 செ.மீ மழை... பெருக்கெடுத்த வெள்ளம்!!

By Narendran SFirst Published Nov 25, 2021, 5:56 PM IST
Highlights

#TamilnaduRain | தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை தற்போது சிவப்பு அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை தற்போது சிவப்பு அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இதனால், இன்று முதல்  அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதலே சென்னை, செங்கல்பட்டு, டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை தொடரும் எனவும்  வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதுமட்டுமின்றி நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும். நாளை மறுநாள் கடலூர், விழுப்புரம்,காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் காற்று உந்துதல் குறைவாக இருந்ததால் அழுத்தம் ஏற்படாமல் வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி உருவாகவில்லை என கூறப்படுகிறது. மேலும் காற்று சுழற்சி காரணமாக, தற்போது கனமழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 08:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை திருச்செந்தூரில் 18 , தூத்துக்குடியில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதற்கிடையே நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை தற்போது சிவப்பு அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!