கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்! திருப்பூர், தேனி, உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் இன்று சம்பவம் இருக்காம்!

By vinoth kumar  |  First Published Jul 18, 2024, 4:00 PM IST

 மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08.30 மணியளவில் உருவாகியுள்ளது. இது அடுத்த 2 தினங்களில் சற்று வலுப்பெற்று ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.


கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08.30 மணியளவில் உருவாகியுள்ளது. இது அடுத்த 2 தினங்களில் சற்று வலுப்பெற்று ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 20 முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°- 28°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

19 முதல் 21ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22ம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

19ம் தேதி மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல், தென் வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20 மற்றும் 21ம் தேதி வரை மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல், தென் வங்கக்கடலின் வடக்குபகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

19  முதல் 22ம் தேதி வரை மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அரபிக்கடல் பகுதிகள் கேரள கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

click me!