மீண்டும் திறக்கப்பட்ட சாராயக் கடை; குடியிருப்புக்கு இடையூறு என்று ஆட்சியரிடம் மக்கள் மனு….

First Published Sep 13, 2017, 7:33 AM IST
Highlights
Re-opened liquor shop People ask collector to colse the tasmac


விழுப்புரம்

விழுப்புரம் இரயில் நிலையம் அருகே மீண்டும் திறக்கப்பட்ட சாராயக் கடை குடியிருப்புக்கு இடையூறாக இருக்கிறது என்றும் அதனை மூடக்கோரியும் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடத்தில்  மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகள் ஆங்காங்கே மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், விழுப்புரம் நகரத்தில் 15 கடைகளை மீண்டும் திறக்கும் பணியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, விழுப்புரம் இரயில் நிலையம் ஒட்டியுள்ள குருசாமிப் பிள்ளைத் தெருவில் மீண்டும் அங்கு சாராயக் கடை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கோபிநாத், வழக்கறிஞர் நடராஜன், தனியார் பள்ளி முதல்வர் மணி உள்ளிட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், “குருசாமிப் பிள்ளைத் தெரு வழியாகவே மாணவர்கள் காமராஜர் நகராட்சிப் பள்ளிக்குச் செல்கின்றனர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் மாணவிகள் சென்று வருகின்றனர். இது மட்டுமன்றி அவ்வழியில் அரசு இசைப் பள்ளியும், மிக அருகே 10 அடி தொலைவில் தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது.

இதனால், அவ்வழியாக சென்று வரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குடிகாரர்களால் நெருக்கடி நிலையும், அச்சமும் ஏற்படுகிறது. இந்த சாராயக் கடைக்கு எதிரே இரயில் நிலையத்தில், 5 இலட்சம் கிலோ லிட்டர் எரிபொருள் சேமித்து வைத்துள்ள இரண்டு டீசல் டேங்குகள் உள்ளன. இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, எச்சரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக, பாதிப்பு ஏற்படும் என்று இரயில்வே நிர்வாகத்தினரும், சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனருகே தனியார் மருத்துவமனை, குடியிருப்புகளும் உள்ளன.

குடிகாரர்கள் புகைபிடித்தல், பாட்டில்களை உடைத்து தகராறு செய்தல் போன்ற நடவடிக்கையில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளனர். இதனால், மாணவர்கள், மக்களை பாதிக்கும் இந்த சாராயக் கடையை மூட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து, விசாரித்த மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், கலால் துறை மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
 

click me!