
வேலூர்
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2500 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
“பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்
தொகுப்பு முறை ஊதியம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலூர் மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்
இதனையடுத்து வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியம் தலைமையில் ஆய்வாளர்கள் புகழேந்தி, அறிவழகன், இலட்சுமணன் மேற்பார்வையில் காவலாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்லும் சாலை உள்பட முக்கிய பகுதிகளில் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காலை முதலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர். ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் காவலாளர்கள் சாலை தடுப்புகளைக் கொண்டு அரண்போல் அமைத்திருந்தனர்.
போராட்டத்திற்கு வந்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நேரம் போக போக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
காவலாளர்கள் அமைத்திருந்த தடுப்புகளைத் தாண்டி சாலையில் நின்றவாறு அவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து கோரிக்கைகளைக் குறித்து முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக திரண்டுச் சென்றனர். ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியபோது காவலாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அணுகு சாலை மற்றும் மேம்பாலத்திற்கு அடியில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டு தர்ணா செய்தனர். இதனால், இரு மார்க்கத்திலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2500 பேரை காவலாளர்கள் கைது செய்து வேனில் ஏற்றி நேதாஜி விளையாட்டு மைதானத்திற்குக் கொண்டுச் சென்றனர். அதன் பின்புதான் போக்குவரத்து சீரானது.