சித்திரை திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தோடு இணைந்து சமையல் செய்தார்.
சித்திரை திருவிழா
மதுரையில் சித்திரை திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வை பக்தியோடு பார்த்து தரிசித்தனர். இந்தநிலையில், அதிமுக அம்மா பேரவை மற்றும் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
கண்ணகி கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..
பக்தர்களுக்கு அன்னதானம்
இதனையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார் தனது குடும்பத்துடன் சமையல் பணியில் ஈடுபட்டார். அன்னதானத்துக்கு தேவையான கத்திரிக்காய்,தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை வெட்டி உணவு தயாரிக்கும் வேலையில் தனது குடும்பத்துடன் சேர்ந்து தயாரித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மதுரை என்றாலே சித்திரைத் திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிகழ்வாகும். குறிப்பாக சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் வகையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம் நிகழ்ச்சி, அதனைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடும்பத்தோடு ஆர்.பி.உதயகுமார் சமையல்
இந்த ஆண்டு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இதன் மூலம் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இந்த சித்திரை திருவிழா நன்னாளில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் சார்பில் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இது போன்ற விசேஷ காலங்களில் கழக அம்மா பேரவை மற்றும் அம்மா சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்கனவே பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் நடைபெற்றது, தற்பொழுது கள்ளழகரை தரிசிக்கும் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என கூறினார்.