
இந்தியாவில் நியாய விலைக்கடைகளில் சர்க்கரை, அரிசி, கோதுமை என மானிய விலையில் பொருள்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேரடி மானியத் திட்டத்தின் கீழ், பல மாநிலங்களில் திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் தமிழக ரேஷன் கடைகளில் கிலோ சர்க்கரை விலை ரூ. 13.50 என்ற குறைந்த விலையில் இதுவரை விற்கப்பட்டு வந்தது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் இந்த விலையிலையே சர்க்கரை வாங்கினர். குடும்ப அட்டையில் ஒரு நபருக்கு அரை கிலோ வீதம், ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு ஏற்ப, மாத சர்க்கரை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சர்க்கரை விலையை 25 ரூபாயாக உயர்த்த தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதாவது, ரூ.13.50ல் இருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, நவம்பர் 1 ஆம் தேதியான இன்று முதல் சர்க்கரை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, சர்க்கரை விலை உயர்வால் ரேஷன் கடை பணியாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக, கடைகளில் உள்ள 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் புதிய விலை, பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது, அனைவருக்குமானது அல்ல. மிகவும் வறுமையில் உள்ள 'அந்தியோதயா' ரேஷன் கார்டுதாரர்கள், சர்க்கரையை பழைய விலைக்கே கிலோ ரூ.13.50க்கும், காவலர் கார்டுதாரர்கள் ரூ. 12.50க்கும், மற்ற அனைத்து கார்டுதாரர்களும் ரூ.25க்கும் சர்க்கரையைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த விலை உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.