
சென்னையில் மீண்டும் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. சென்னையின் நகர்ப் பகுதிகளான தி.நகர், மயிலாப்பூர், கிண்டி, தாம்பரம், எழும்பூர், சைதாப்பேட்டை, புரசைவாக்கம், தேனாம்பேட்டை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்நிலையில் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று காலை வானம் சற்று தெளிவாக இருந்த நிலையில் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. இதனால் அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால், தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். மேலும், சென்னையில் வரும் 4 ஆம் தேதி வடக்கு கடலோரப் பகுதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை செங்கல்பட்டு நெடுஞ்சாலை, சென்னை பூந்தமல்லி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது.