
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் வடக்கு பகுதியை பதம் பார்த்த மழை இன்று தென் கடலோர மாவட்டங்களுக்கும் திரும்பியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சும்மா பிச்சு எடுத்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவும் மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இன்று காலையில் இருந்து மழை சற்று நின்று , இடைவெளி கொடுத்து இருக்கிறது.
சென்னையை பொருத்த வரை நேற்று நள்ளிரவுக்கு பின்தான் நகரம் முழுவதும் மழை பெய்துள்ளது.
சோழவரம்- 67 மி.மீ
திருப்போரூர்- 57 மி.மீ
அண்ணா பல்கலை- 48 மி.மீ
கொளப்பாக்கம் (விமானநிலையம் அருகே)-42 மி.மீ
நுங்கம்பாக்கம்-32 மி.மீ
தரமணி- 32 மி.மீ
எண்ணூர்- 26மி.மீ
இந்துஸ்தான் பல்கலை- 23 மி.மீ
கடம்பத்தூர்- 19 மி.மீ
சத்யபாமா பல்கலை- 16 மி.மீ
என சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் மழை கொட்டித் தீர்த்தது. வடகிழக்குப் பருவமழையின் போது, இரவு நேரங்கள், அதிகாலை நேரங்களில் மட்டும்தான் கனமழை இருக்கும். பகல் நேரங்களில் பெய்யும் மழை என்பது, இரவு, அதிகாலை நேரத்தில் பெய்யும் மழையைக் காட்டிலும் வலிமை குறைவாகவே இருக்கும்.
சென்னை கடற்கரைப்பகுதியில் இருக்கும் மேகக்கூட்டம், டெல்டா பகுதிக்கு நகர்ந்து செல்வதில் தடுமாற்றத்தை சந்திப்பது ரேடாரில் காணமுடிகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களை பதம் பார்த்த மழை தற்போது தென் கடலோர மாவட்டங்களின் பக்கம் திரும்பியுள்ளது.
இதையடுத்து இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.