
அரியலூர்
செந்துறையில் புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் சாராயக் கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்காவில் முன்னர் எட்டு டாஸ்மாக் சாராயக் கடைகள் இயங்கிவந்தன.
இந்த சாராயக் கடைகள் அனைத்தும் பெண்கள் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்களால் மூடப்பட்டது.
மூடப்பட்ட சாராயக் கடைகள் அனைத்தையும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் இணைந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒதுக்குபுறமாக உள்ள இடத்தின் உரிமையாளர்களின் ஆதரவோடு கடையை திறந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.மாத்தூரில் மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை செந்துறை செம்பட்டாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது.
மேலும், அந்தக் கடையின் அருகிலேயே மற்றொருக் கடையையும் அமைப்பதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் முயற்சித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.
அதனைத் தொடர்ந்து திறக்கப்பட இருந்த மற்றொரு புதிய டாஸ்மாக் சாராயக் கடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு போராட்டங்கள் நடத்தி மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை மீண்டும் அந்தப் பகுதியில் திறக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.