தமிழகத்தில் கண்டெடுத்த அழிவு நாள் மீன்! பேரழிவுக்கு முன்னெச்சரிக்கையா?

Published : Jun 21, 2025, 12:36 PM IST
Doomsday fish

சுருக்கம்

தமிழ்நாட்டுக் கடலோரத்தில் அரிய வகை ஓர்மீன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் 'அழிவு நாள் மீன்' பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அறிவியல் ஆய்வுகள் இதற்கும் இயற்கை பேரழிவுகளுக்கும் தொடர்பு இல்லை என்கின்றன.

தமிழ்நாட்டுக் கடலோரத்தில் அண்மையில் ஓர்மீன் (Oarfish) என்ற அரிய வகை மீன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் 'அழிவு நாள் மீன்' (doomsday fish) என்று குறிப்பிடப்படும் இந்த மீன் கண்டெடுக்கப்பட்டது, சமூக வலைத்தள பயனர்களிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ஏழு பேர் சேர்ந்து இந்த அசாதாரண மீனைத் தூக்கி வரும் காட்சி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. விநோதமான தோற்றத்தில் காணப்படும் இந்த மீனை வைத்து உண்மையிலேயே இயற்கை பேரழிவுகளை கணிக்க முடியுமா என விவாதம் ஏற்பட்டுள்ளது.

அறிவியல் சொல்வது என்ன?

இந்த மர்மமான மீனை பற்றிய கதைகளுக்குள் செல்வதற்கு முன், நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். "புல்லட்டின் ஆஃப் தி சீஸ்மோலாஜிகல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா" (Bulletin of the Seismological Society of America) என்ற பத்திரிகையில் 2019 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, பல ஆண்டுகளாக சேகரித்த தரவுகளை பகுப்பாய்வு செய்துள்ளது. Oarfish போன்ற ஆழ்கடல் மீன்களின் நடமாட்டத்திற்கும் ஜப்பானில் ஏற்படும் பூகம்பங்களுக்கும் இடையே எந்தவிதமான குறிப்பிடத்தக்க தொடர்பும் இல்லை என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. Oarfish 'அழிவு நாள் மீன்' என்று பெயர் பெற்றதில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதை அந்த ஆய்வு நிரூபிக்கிறது.

 

 

அரிய வகை மீன் குறித்த அறிவியல் விளக்கம்:

தமிழ்நாட்டில் பிடிக்கப்பட்ட உயிரினம் ஒரு ராட்சத ஓர்மீன் (Regalecus glesne) ஆகும். இது உலகின் மிக நீளமான எலும்பு மீன் ஆகும். இது 36 அடி (11 மீட்டர்) நீளம் வரை வளரக்கூடியது. இந்த மீன்  பொதுவாக மெசோபெலாஜிக் மண்டலத்தில், கடலின் மேற்பரப்பில் இருந்து 660 முதல் 3,300 அடி ஆழத்தில் வாழ்கின்றன. அங்கு சூரிய ஒளி அரிதாகவே ஊடுருவும்.

வெள்ளி நிறத்தில் இருக்கும் இந்த மீன் அதன் தனித்துவமான சிவப்பு நிற கொண்டை போன்ற முதுகுத் துடுப்புடன், ஆழமான நீரில் வாழ்கிறது. இதனால் இந்த மீனை மிகவும் அரிதாகவே காண முடியும். இவை தசைகள் இல்லாதவை என்பதால் மெல்லியதாகவும் மெதுவாகவும் இருக்கும். கடலில் செங்குத்தாக நீந்தும்.

இந்த மீன்கள் கடலின் மேற்பரப்புக்கு வருவது மிகவும் அரிதான நிகழ்வு. பொதுவாக நோய்வாய்ப்பட்டோ, இறக்கும் நிலையில் இருந்தாலோ அல்லது எப்போதாவது இனப்பெருக்கம் செய்யும் நோக்கத்துடனோதான் இந்த மீன்கள் மேற்பரப்புக்கு வருகின்றன என அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஓஷன் கன்சர்வேன்சி (Ocean Conservancy) கூறுகிறது. வரவிருக்கும் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கடலின் மேற்பரப்புக்கு வருவதில்லை எனவும் அந்த அமைப்பு தெளிவுபடுத்துகிறது.

பழங்கால நம்பிக்கைகள்:

'அழிவு நாள் மீன்' என்ற பெயர் பழங்கால ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளிலிருந்து உருவானது. அங்கு ஓர்மீன்கள் 'ரியுகு நோ சுகாய்' (ryugu no tsukai) என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு 'கடல் கடவுளின் அரண்மனையிலிருந்து வந்த தூதுவன்' என்று பொருள். இந்த நம்பிக்கை பல குறிப்பிடத்தக்க தற்செயல் நிகழ்வுகளைத் தொடர்ந்து சர்வதேச கவனத்தைப் பெற்றது. குறிப்பாக 2010ஆம் ஆண்டில், பல இறந்த ஓர்மீன்கள் ஜப்பானில் கரை ஒதுங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, 2011 இல் டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி பேரழவுகள் நிகழ்ந்தன. இது ஃபுக்குஷிமா அணுசக்தி பேரழிவுக்கும் வழிவகுத்தது.

ஆகஸ்ட் 2024 இல், சான் டியாகோ அருகே 12 அடி நீளமுள்ள ஓர்மீன் ஒன்று கண்டெடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. இது இந்த ஆழ்கடல் உயிரினங்களைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் அதிகரித்தது.

உலகளாவிய நிகழ்வு:

தமிழ்நாட்டில் ஓர்மீன் கண்டெடுக்கப்பட்டது, உலகம் முழுவதும் ஓர்மீன் குறித்து அதிகரித்துவரும் கவலைக்குரிய போக்கின் ஒரு பகுதியாகும். சமீபத்தில் மெக்ஸிகோ, டாஸ்மேனியா மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த அரிய வகை மீன் காணப்பட்டது.

ஓர்மீன்கள் அதிகமாகத் தென்படுவது சுற்றுச்சூழல் காரணங்கள் குறித்த ஊகங்களை அதிகரித்துள்ளது. சில வல்லுநர்கள் காலநிலை மாற்றம், கடல் வெப்பமயமாதல் அல்லது ஆழ்கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்த உயிரினங்களை ஆழமற்ற பகுதிகளுக்கு விரட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!
அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!