"இந்த இடம் நித்யானந்தாவுக்குதான் சொந்தம்" - நிலத்தை அபகரிக்க முயன்ற ரஞ்சிதா... பல்லாவரத்தில் பரபரப்பு...!!

First Published May 17, 2017, 12:34 PM IST
Highlights
ranjitha trying to occupy land in pallavaram


பல்லாவரம் நகராட்சி 11வது வார்டு பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது உறவினர்கள் சிலர், அரசு புறம்போக்கு கிராம நத்தம் 2 ஏக்கர் 19 சென்ட் பரப்பளவு கொண்ட ஒரே வளாகத்தில் தனித்தனியாக வீடுகள் கட்டி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி என கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த ராமநாதன் என்பவர், கிருஷ்ணன் மற்றும் அவர்களது உறவினர்கள் வசிக்கும் நிலம் தனக்கு சொந்தமானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்து, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. ஆனால், ராமநாதன் எவ்வித ஆவணமும் சமர்ப்பிக்கவில்லை. இதனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கிருஷ்ணன் தனது உறவினர்களுடன் மேற்கண்ட பகுதியில் வசிக்கிறார்.

இந்நிலையில், நேற்று மாலை சில கார்கள், லாரிகள் அங்கு சென்றது. அதில், நடிகை ரஞ்சிதாவும் ஒருவராக காரில் இருந்து இறங்கினார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

அங்கிருந்த கிருஷ்ணனிடம் பேசிய ரஞ்சிதா, “நீங்கள் வசிக்கும் இந்த இடம் சென்னையை சேர்ந்த ராமநாதனின் மகளுக்கு சொந்தமானது. தற்போது அவர் எங்கள் மடத்தில் நித்யானந்தாவின் சீடராக சேர்ந்துவிட்டார். இந்த நிலத்தை நித்யானந்தா மடத்திற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

எனவே நீ உடனே இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு’’ என மிரட்டியுள்ளார்.

இதற்கிடையில், லாரியில் இருந்து இறங்கிய நித்யானந்தாவின் சீடர்கள் சிலர், அந்த பகுதியில் குடிசைகள் அமைத்தனர். அங்கு நித்யானந்தாவின் படத்தை வைத்து பூஜை செய்ய தொடங்கினர். அதை தடுக்க சென்ற அப்பகுதி மக்களிடம், தகராறில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இரு தரப்பினரிடமும் சமரசம் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இருதரப்பு புகார்களை பெற்று கொண்டு விசாரித்து வருகின்றனர்.

click me!