
கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் மற்றும் நளினி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள முருகனை பார்க்க அவரது தாய், சோமனி வேலூர் வந்துள்ளார். மகன் முருகனை பார்க்க அவர், சிறை அதிகாரிகளிடம் மனு செய்தார். ஆனால், சிறை அதிகாரிகள், நீதிமன்றத்தை அணுகி, உத்தரவு பெற்றால் மட்டுமே முருகனை சந்திக்க முடியும் என கூறிவிட்டனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள முருகன், தனது தாய் சோமனியை சந்திக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால், அவரது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், முருகன் இருந்த சிறை அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், கடந்த மாதம் முருகன் இருந்த சிறை அறையின் கழிப்பறையில் 2 செல்போன், 2 சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் யாரை தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு யார் செல்போன் கொடுத்தது என அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால், அதைபற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தாயை சந்திக்க அவர் விருப்ப மனு செய்துள்ளார். அதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த்தால் முருகனின் மனு நிராகரிக்கப்பட்டது என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.