
தமிழகத்தில் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கும் பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பிற்கும் அரசு பொதுத் தேர்வு நடத்தலாமா என தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்கனிடம் பேசிய அவர், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைப் போல் 11 ஆம் வகுப்புக்கும் அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதாக கூறினார்.
பிளஸ் 1 க்கும் பொதுத் தேர்வு நடத்தினால் தான் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என கூறினார். தற்போது நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அதனை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான பாடத்திட்டம் இன்றும் 2 நாட்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.