சுவாதிகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராம்குமார் மரணம் - மனித உரிமை விசாரணை மேற்கொள்ள தடை

By Thanalakshmi VFirst Published Dec 1, 2021, 3:22 PM IST
Highlights

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
 

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது

 சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், அலுவலகம் செல்வதற்காக காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி கடந்த 2016 ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பட்டபகலில், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்போது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த போலீசார், அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.மேலும்புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. 

மேலும் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்சார வயர் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கபட்டது. ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். ராம்குமாரின் தந்தை பரமசிவம் புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது

மனித உரிமை ஆணைய விசாரணையை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக்கோரியும் சென்னை மத்திய சிறைச்சாலையின் முன்னாள் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 'சம்பவம் நடந்து ஓராண்டிற்குள் விசாரணைக்கு எடுப்பதற்கு பதிலாக, 4 ஆண்டுகளுக்கு பிறகு மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க சட்டத்தில் இடமில்லை. ராம்குமார் தந்தை தரப்பில் தவறான கருத்துகள் ஊடகங்களில் பரப்பப்படுகிறது' என்று தெரிவித்தார். மேலும் அவர், கைது செய்யப்பட்ட ராம்குமார் உயர் பாதுகாப்பு பிரிவு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார்.

தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தவர் அங்குள்ள மின்சார சுவிட்பாக்சை, உடைத்து ஒயரை பிடித்து தற்கொலைக்கு முயன்று, பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, எய்மஸ் மருத்துவர் தலைமையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இதுக்குறித்து திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டும் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் அமர்வு, ஆணையத்தில் மீண்டும் டிசம்பர் 7ல் வழக்கு, விசாரணைக்கு வருவதால், மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை விதித்தும், ஆணைய பதிவாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

click me!