கைதுசெய்யப்பட்ட 55 மீனவர்கள் நிலை என்ன.? - வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய முதலமைச்சர்

By Thanalakshmi VFirst Published Dec 19, 2021, 9:39 PM IST
Highlights

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 55மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் 8 விசைப் படகுகளையும் மீட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள்  43 பேர் மற்றும் மண்டபத்தில் இருந்து சென்ற 12 பேர் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவரது படகுகளை பறிமுதல் செய்தனர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, 43 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள மீனவர்கள், இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் மீனவர்கள் மீட்கப்படும் வரை மீன்பிடித் தொழில் நிறுத்தத்தை மீனவர்கள் அறிவித்திருக்கிறார்கள். 

அதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைபடகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததுடன் மீனவர்கள் 12 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

click me!