
இதுக்குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நந்தனத்தில் அமைந்துள்ள நிதித் துறை வளாகத்திற்கு 'அம்மா வளாகம்' என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது. ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தில் 10 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு தளங்களைத் திறந்து வைக்கும்போது "சென்னை - நந்தனம், அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்" என்று 16-06-2020 நாளிட்ட செய்தி வெளியீடு எண். 426-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு வெளியிடப்பட்ட தொலைபேசி கையேட்டில், கருவூல அலுவலகம், ஓய்வூதியம் வழங்கல் அலுவலகம், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் (தெற்கு), மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கை இயக்ககம், ஓய்வூதிய இயக்ககம் ஆகியவற்றின் முகவரியிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.'அம்மா வளாகம்' என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித் துறை வளாகத்தில் திமுக. பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகனின் சிலையை முதல்வர் திறந்து வைக்கவுள்ளதாகவும், அந்த வளாகத்திற்கு ஏற்கனெவே உள்ள 'அம்மா வளாகம்' என்ற பெயரை நீக்கிவிட்டு 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.
பேராசிரியர் க. அன்பழகன் நிதித் துறை உட்பட பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில், 'அம்மா வளாகம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று வைப்பது நாகரிகமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொவருவரை புகழ்வது போல் ஆகும்.
இந்த செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
'அம்மா வளாகம்' என்ற பெயரை மாற்றி 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று வைப்பதை முதலமைச்சர் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரைச் சூட்டலாம் என்றும் கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.