மூலிகை எரிபொருள் குறித்த ரகசியத்தை ஆகஸ்ட் 15 க்கு பின் பிற நாட்டுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும், அங்காவது தனது கண்டுபிடிப்பு பயன்படட்டும் என ராமர் பிள்ளை வேதனையுடன் தெரிவித்தார்
நிரபராதி என தீர்ப்பு -ராமர் பிள்ளை
சென்னை கோடம்பாக்கத்தில் நட்சத்திர விடுதியில் போஸ்வாலா என்ற மூலிகை உள்ளிட்ட மூன்று மூலிகைகள் அவற்றுடன் ரசாயன மூலிகை கலவைகள், நிக்கல் மற்றும் பிளாட்டின பொருள்கள் உதவியுடன் செய்தியாளர்கள் மத்தியில் மூலிகை எரிபொருளை ராமர் பிள்ளை செய்து காட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்திய சிபிஐ அதன் மீதான உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க தவறிவிட்டதாகவும்,
நீதிமன்றத்தால் தான் நிரபராதி என அறிவிக்கப்பட்ட நிலையில் 23 ஆண்டுகால நீதிமன்ற போராட்டம் மற்றும் அதற்கு முன் ஏழு ஆண்டுகால போராட்டம் என 30 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் நிரபராதி என தீர்ப்பு பெற்று ஆறு மாதம் ஆகிவிட்டதாக தெரிவித்தார். எனது ஆய்வு கூடத்தில் இருந்து அதிகாரிகள் எடுத்துச் சென்ற பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மூலிகை எரிபொருள் ஒரு லிட்டர் ரூ.15
என் மீது குற்றம் சாட்டிய விஞ்ஞானிகளை நீதிமன்ற வழக்கின் போது குறுக்கீடு செய்ததாகவும், ஆனால் அவர்கள் தரப்பு ஆதாரங்களை காட்ட மறுத்து விட்டதாக விமர்சித்தார். தனது கண்டுபிடிப்பை அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் அலட்சியப்படுத்தியதாகவும் என்னிடமிருந்து கைப்பற்றிய எனது பொருட்களை திரும்ப கொடுத்தால் எனது கண்டுபிடிப்பின் மூலம் மூலிகை எரிபொருளை தயாரித்து மக்களை காப்பாற்றி விடுவேன் என தெரிவித்தார். தனது மூலிகை எரிபொருள் ஒரு லிட்டர் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் எனவும் தற்போது கிடைக்கக்கூடிய மைலேஜ் விட வாகனங்களில் கூடுதல் மைலேஜ் கிடைக்கும் என தெரிவித்தார். மூலிகை எரிபொருளை ராணுவத்தினரிடம் தான் தயாரித்து வழங்கியுள்ளதாகவும் அவர்கள் அதனை பயன்படுத்திய பின்னர் அது குறித்த அறிக்கையை தான் கேட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
பிற நாட்டுக்கு பகிர திட்டம்
தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு நாட்டு மக்களுக்கு அர்ப்பணம் செய்ய தயாராக இருப்பதாகவும்,அதற்கு தமிழக முதலமைச்சரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அரசு தன்னை அனுமதித்தால் எவ்வித பிரதிபலனும் இல்லாமல் மூலிகை எரிபொருளை நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார் வருகிற சுதந்திர தினத்திற்குள் மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்கவில்லையென்றால், மூலிகை எரிபொருள் குறித்த ரகசியத்தை ஆகஸ்ட் 15 க்கு பின் பிற நாட்டுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும், அங்காவது தனது கண்டுபிடிப்பு பயன்படட்டும் என ராமர் பிள்ளை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
கோவை டிஐஜி தற்கொலை விவகாரத்தில் இருவர் நேரில் ஆஜராகி விளக்கம்; 8 பேருக்கு சம்மன்