ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளி கல்வித்தரம் எவ்வாறு உயரும்? கேள்வி எழுப்பும் ராமதாஸ்

Published : Jan 11, 2024, 01:05 PM IST
ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளி கல்வித்தரம் எவ்வாறு உயரும்? கேள்வி எழுப்பும் ராமதாஸ்

சுருக்கம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இருந்து நடப்பாண்டில் பல்லாயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், 1966 ஆசிரியர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்கள் தேர்வு

தமிழ்நாட்டில் 2024&ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பள்ளிகளுக்கு 1966 புதிய ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024ஆம் ஆண்டில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 7 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன; அவற்றில் ஆசிரியர் தகுதித் தேர்வு, முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைக்கான தேர்வு ஆகியவை  தகுதித் தேர்வுகள் ஆகும். இவற்றைத் தவிர்த்து விட்டு பார்த்தால் ஆசிரியர் நியமனத்திற்காக 5 தேர்வுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை 1766 இடைநிலை ஆசிரியர்கள், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என 1966 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 

கல்லூரிகளுக்கு உதவிப்பேராசிரியர்கள்

கல்லூரிக் கல்வியைப் பொறுத்தவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள்,  சட்டக் கல்லூரிகளுக்கு 56 உதவிப் பேராசியர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவர்கள் தவிர ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு 139 விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள போட்டித் தேர்வு அறிவிப்புகளில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு 139 விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு மட்டும் தான் புதியதாகும்.

மீதமுள்ள நான்கும் கடந்த ஆண்டு நடத்தப்படவிருந்த போட்டித்தேர்வுகள். ஆனால், திட்டமிடப்பட்டவாறு கடந்த ஆண்டு அவற்றுக்கான அறிவிக்கை வெளியிடப்படாத நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலும் கூட ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படுமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 


அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒவ்வொரு மாதமும் பெருமளவிலான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். அதனால், ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.  பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டில் 6553 ஆக இருந்த காலியிடங்களின் எண்ணிக்கை 8643 ஆக அதிகரித்திருப்பதாக தமிழக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த இடங்களை முழுமையாக நிரப்பாமல் 1766 இடங்களை மட்டும் நிரப்புவது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இருந்து நடப்பாண்டில் பல்லாயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், 1966 ஆசிரியர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.

ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்திடுங்கள்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒரே சீராக இல்லை. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில் வடமாவட்டங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களில் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும். இத்தகைய சூழலில் காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டால் மட்டும் தான்  வடமாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அவற்றை புறக்கணித்து விட்டு, மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மேலும் மேலும் சீரழியுமே தவிர, உயராது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க நிதிப்பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கக் கூடாது. கல்வித்துறைக்கும், மருத்துவத்துறைக்கும் தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு  தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு முன்பு மக்களின் கருத்தை கேளுங்கள்- அரசுக்கு அட்வைஸ் சொன்ன இபிஎஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!
மதுரை விழிப்புடன் இருக்கும் மண்.. கோயில் நகரம் தொழில் நகராகவும் மாறணும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!