தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அரசு தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சண்முக சுந்தரம் ராஜினாமா
கடந்த 2021-ல் திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் 1996 -2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தார். 2002-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு 2008-ம் ஆண்டு வரை எம்.பி-யாக இருந்தார். ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த எம்.சி.ஜெயின் விசாரணை ஆணையம் உட்பட பல விசாரணைகளுக்கு சண்முகசுந்தரம் அரசு சார்பாக வாதாடியுள்ளார். இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்வதாக தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்தார்.
புதிய அரசு தலைமை வழக்கறிஞர் யார்
இதற்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றதையடுத்து நேற்று தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். இதனையடுத்து புதிதாக அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை தமிழக அரசு நியமித்துள்ளது. அரசு தலைமை வழக்கறிஞராக பி. எஸ். ராமன் இரண்டாவது முறையாக பொறுப்பேற்க உள்ளார் இதற்கு முன்பாக 2009 - 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் பி.எஸ் ராமன் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். பி.எஸ். ராமன் நவம்பர் 7, 1960 இல் பிறந்தார். இவரது தந்தை வழக்கறிஞர் வி.பி. ராமன், 1977 முதல் 1979 வரை தமிழ்நாட்டின் அட்வகேட்-ஜெனரலாகப் பணியாற்றியுள்ளார். ராமன் 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
பொற்றுபேற்றார் பி.எஸ் ராமன்
சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல நீதிமன்றங்களில் பல வழக்குகளில் சிறப்பாக வாதாடி வெற்றி பெற்றுள்ளார். புதியாக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.ராமன் இன்று காலை பொறுப்பேற்கவுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிமன்றம் தாமகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து வரும் நிலையில், பல சவால்கள் புதிய அரசு தலைமை வழக்கறிஞருக்கு காத்துக்கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்