சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்தை சமூகநீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என பாமக நிறுனவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீதிபதி பற்றாக்குறை
நிலப்பிரச்சனை, அடிதடி, கொலை போன்று சமூகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தில் தான் சரியான தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் நம்பியுள்ளனர். இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாள்தோறும் ஏராளமான வழக்குகள் தொடரப்படுகிறது. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என கூறுவார்கள். அது போல நீதிமன்றத்தில் நீதிபதி பற்றாக்குறை காரணமாக பல வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் உள்ள இடத்தில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. விரைவில் மேலும் 3 நீதிபதிகள் ஓய்வு பெறவுள்ளனர். இந்தநிலையில் தற்போது வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 5 அரை லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது.எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
நீதிபதி பணியிடத்தை நிரப்ப வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி 5.63 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த புள்ளிவிவரம் கவலையளிக்கிறது! இந்தியாவில் நிலுவையிலுள்ள மொத்த வழக்குகளில் 10% சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிலுவையில் உள்ளன என்பதிலிருந்தே, அங்கு எவ்வளவு வழக்குகள் தேங்கியுள்ளன என்பதை அறியலாம். உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பது தான் இதற்கு காரணம் ஆகும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த மாதத்தில் இரு நீதிபதிகளும், திசம்பர் மாதத்தில் இன்னொரு நீதிபதியும் ஓய்வு பெறுகின்றனர். அதனால் காலியிடங்கள் 22 ஆக உயரும். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் அறிகிறேன். நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து பின்தங்கிய சமூகங்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும்! என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்
பழனிக்கு சென்ற பழனிசாமி...! ஜோசியர் சொன்னதால் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டாரா இபிஎஸ்..?