
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்று மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி ராஜீவ் காந்தி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் சென்ட்ரல் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மருத்துவர்களின் சாலை மறியல், அதனைத் தொடர்ந்து நோயாளி உயிரிழந்தார் போன்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனை டீன் நாராயணசாமி, மருத்துவர்களின் போராட்டத்தால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு திரும்பி வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.