தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது - இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம்

First Published Mar 16, 2017, 6:18 PM IST
Highlights
No situation can justify the beating of fishermen


தமிழக மீனவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் பலப் பிரயோகத்தை பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று இலங்கையிடம்மத்தியஅரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் கடந்த 6-ந்தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,துப்பாக்கி சூடு நடத்தியதில்,  தங்கச்சி மடத்தை சேர்ந்தபிரிட்ஜோ (வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார்.  கிளிண்டன்என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார்.

போராட்டம்

இது தொடர்பாக மீனவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சு நடத்தி, இலங்கை அரசிடம் கூறி முழுமையாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததால், மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

விளக்கம்

தமிழக மீனவர் கொல்லப்பட்டது பிரச்சினையை  மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையிலும் தமிழக எம்.பி.கள் கடந்த சில நாட்களாக  எழுப்பி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷமிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று விளக்கம் அளித்தார்.

உறுதி

அப்போது அவர் கூறுகையில், “ தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது, தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தை மத்திய அரசு  இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் கொண்டு சென்று, பேசியுள்ளது.

நம் நாட்டின் மீனவர்கள் நலன், பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க அதிகபட்ச முன்னுரிமையை மத்திய அரசு எடுக்கும் என்பதை நான் எம்.பி.களுக்கு உறுதி அளிக்கிறேன். தமிழக மீனவர்களுக்கு எதிராக எந்த சூழலிலும் பலப்பிரயோகம், தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று இலங்கையிடம் கண்டிப்புடன் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

தொடர்ந்து பேச்சு

தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு அதிகாரிகளுடன் அடிக்கடி மத்திய அரசு பேசி வருகிறது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை கடந்த 2014ம் ஆண்டு 1045 பேரை விடுவித்துள்ளோம், 2015-ல் 375 மீனவர்கள், 2016-ல் 333 மீனவர்கள், 2017ம் ஆண்டு 51 மீனவர்களை விடுவித்துள்ளோம்.

விடுதலை

சமீபத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 85 தமிழக மீனவர்களில் 77 பேரை விடுவித்தோம். இதில் 8 மீனவர்கள் மட்டும் விரைவில் நாடு திரும்புவார்கள். இவர்களின் படகுகளையும் விடுவிக்க பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

மறுப்பு

தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொல்லப்பட்டு தொடர்பாக அந்தநாட்டு அரசிடம் மத்திய அரசு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. ஆனால், கடற்படையினர் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசு மறுக்கிறது.

அதிகாரமில்லை

இது தொடர்பாக இந்திய தூதர், இலங்கை பிரதமர், கடற்படை தளபதியுடன் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியமீனவர்கள் எல்லை மீறி இலங்கை கடற்பகுதி எல்லைக்குள் வந்தாலும், அவர்கள் மீது எந்த சூழலிலும் துப்பாக்கிசூடு நடத்த அதிகாரமில்லை என்று வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து அழுத்தம்

கடந்த 7-ந்தேதி இந்தோனேசியா ஜகார்தா நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, இலங்கை அதிபர்சிறிசேனாவிடம், மீனவர் துப்பாக்கி சூடு விவகாரத்தை கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையில் இலங்கை அரசுக்கு தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும். பிரதமர் மோடியும், நானும் இந்த பிரச்சினையை உயர்மட்ட அளவில் கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

click me!