
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட திடீர் போராட்டத்தால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மருத்துவரை மாணவரின் உறவினர்கள் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுதாகர் என்பவர் சிகிச்சை அளிக்க ஆளின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சுதாகரனின் உறவினர்கள் ஆவேசத்துடன் இருப்பதால் மருத்துவமனை வளாகம் பெரும் பதற்றமாகவும், பரபரப்புடனும் காணப்படுகிறது.
சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதே சுதாகர் இறந்ததிற்கு முழு காரணம் என்று கூறி சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் நியாமற்ற கோரிக்கையை முன்வைத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.