2014 உச்சநீதிமன்ற தீர்ப்பு முதல் இன்று வரை நடந்தது என்ன? பேரறிவாளின் 31 ஆண்டுகளாக சிறைவாசம் முடிவுக்கு வந்தது

By vinoth kumarFirst Published May 18, 2022, 11:51 AM IST
Highlights

ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதனையடுத்து, 1991 ஜூன் 11ம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தனு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது. 

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை  உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. 

ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதனையடுத்து, 1991 ஜூன் 11ம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தனு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 19 பேர் தண்டனை காலத்தை நிறைவு செய்ததாக கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று நான்கு பேரும் அனுப்பிய மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி இவர்கள் நால்வரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினர். உயர்நீதிமன்றம் ஆளுநரின் முடிவை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியதுடன் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.

நால்வரின் தூக்கு தண்டனை குறித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்நிலையில், தங்களது கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் நீண்டகாலம் முடிவெடுக்கவில்லை என பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் ஆயுள் தண்டனை பெறும் இந்த மூவர் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இதனையடுத்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை மத்திய அரசுக்கும் முறைப்படுத்தி தமிழக அரசு தெரிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்று மத்திய அரசு தடை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் விவகாரம் மத்திய அரசுக்கா? மாநில அரசுக்கா? என்கிற பிரச்சனை எழுந்தது. 2015-ம் ஆண்டு டிசமப்ர் 2-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான் பெஞ்ச், அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு என்பது மாநில அரசுக்கான சிறப்பு அதிகாரம் தரக் கூடியது. ஆகையால் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசு 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை இல்லை என தீர்ப்பு தந்தது. பின்னர் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

2018-ம் ஆண்டு 7 தமிழரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி கோகாய் பெஞ்ச் தீர்ப்பளித்தது. 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மீதுதான் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் பேரறிவாளன் தம்மை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தமிழக அரசின் 2018-ம் ஆண்டு தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவர் முடிவுக்கு அனுப்பியது ஏன்? என பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள்  எழுப்பினர். 

அத்துடன் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உண்டு எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், மத்திய அரசோ, சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேரை விடுதலை செய்வது மத்திய அரசின் கைகளில்தான் என திரும்ப திரும்ப வாதிட்டது. இந்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. தமிழக அரசும் ஏற்கனவே 9 மாதங்களுக்கும் மேலாக பரோல் வழங்கியது. இந்நிலையில், தனது அதிகாரதத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக கூறி மூத்த நீதிபதியான நாகேஸ்வர ராவ் அமர்வு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

click me!