பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சிதம்பரம் அருகே தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு கொண்டு வரப்படும் வினாத்தாள் அங்காங்கே வைக்கப்படுகிறது. இதை பாதுகாக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள வீனஸ் தனியார் பள்ளியில் வினாத்தாள் வைக்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு பணியில் 4 மணிநேரத்திற்கு ஒரு போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெரியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.