நடிகர் ரஜினியின் ரசிகர்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை,திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் புயலை விட வேகமாக நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
புயலால் நாகை சின்னாபின்னமான நிலையில் காலையில் எழுந்த மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர். கடைகள் திறக்கப்படவில்லை, பேருந்துகள் இயங்கவில்லை இதனால் காலை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென வந்த வாகனம் ஒன்று நாகை பேருந்து நிலையம் அருகே வைத்து உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க ஆரம்பித்தது.
மயிலாடுதுறையில் இருந்து வந்த அந்த வாகனம் ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தது. புயலின் வேகம் குறித்து அறிந்த மயிலாடுதுறை ரஜினி ரசிகர்கள் முதல்நாளே நிவாரணப்பணிகளுக்கு திட்டமிட்டு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். புயல் கரையை கடந்த உடன் மயிலாடுதுறையில் இருந்து நேராக நாகை சென்று உணவை விநியோகித்தனர். இதனை தொடர்ந்து கும்பகோணம், சுவாமிமலை உள்ளிட்ட பகுதி ரஜினி ரசிகர்களும் உணவுகளுடன் நாகை வந்து சேர்ந்தனர்.
வேதாரண்யம் நகரே முற்றிலுமாக உருக்குலைந்த தகவல் அறிந்து மிகவும் சிரமப்பட்டு அங்கும் சென்று பிற்பகலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்தனர் ரஜினி ரசிகர்கள். இதே போல் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டையிலும் கூட ரஜினி ரசிகர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு நிவாரண உதவிகளை தீவிரமாக வழங்கி வருகின்றனர்.
வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்வது, குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் வழங்குவது என ரஜினி ரசிகர்கள் திட்டம் போட்டு உதவிகளை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாகவே தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மிகுந்து சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இது குறித்து அறிந்த ரஜினி நேரடியாக சில நிர்வாகிகளை அழைத்து பாராட்டியுள்ளார். இதனால் உச்சி குளிர்ந்து போன நிர்வாகிகள் தங்கள் உதவியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். அ.தி.மு.க – தி.மு.க போன்ற கட்சியினரும் நிவாரண உதவிகளை செய்து வந்தாலும், ரஜினி ரசிகர்களை போல் ஒருங்கிணைந்து உதவிகளை அவர்களால் செய்ய முடியவில்லை.
இதே போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரும் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளை செய்வதுடன் சீரமைப்பு பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இதனால் நாகை மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.