
திருச்சி ரயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டரை கட்டாயப்படுத்தி எச்.ராஜா தலைமையிலான குழு தூய்மை இல்லாத குடிநீரை குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவரான எச்.ராஜா தலைமையில், வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி மற்றும் ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் 13 உறுப்பினர்களைக்கொண்ட குழுவினர், கடந்த சில தினங்களாகச் சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இந்த குழு ஆய்வு நடத்தி வருகிறது.
திருச்சி ரயில் நிலைய உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தது. 6-ஆவது நடைமேடையில் பயணிகளுக்கான குடிநீர் குழாயில் வந்த நீரை ஆய்வு செய்தனர். அப்போது , சுகாதாரமற்ற குடிநீர் வந்ததைக் கவனித்த அந்த குழுவினர், ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்ரீராமை அந்த குடிநீரை குடிக்க வைத்துள்ளனர். அந்த நீரை குடித்த ஸ்ரீராம், உடனே அதைத் துப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குழுவின் உறுப்பினர் இர்ஃபான், ஸ்ரீராமின் தலையை அழுத்தி நீரை குடிக்க கட்டாயப்படுத்தினார். அதற்கு உடன்பட ஸ்ரீராம் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆய்வுக் குழுவினர், இது குடிநீரா? கழிவுநீரா? என கோபத்தோடு கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்க முடியாமல் ஸ்ரீராம் தடுமாறினார்.
அடுத்ததாக அந்தக் குழு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டி, பயணிகள் பாதுகாப்பு அறை என பலவற்றில் ஆய்வு செய்தது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் இருந்த கழிவறை மிக மோசமாக இருந்ததைப் பார்த்த எச்.ராஜா, திருச்சி ரயில்வே ஜங்ஷன் அதிகாரிகளைக் கடுமையாக வசைபாடியுள்ளார்.