
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நேற்று இரண்டாவது நாளாக விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை 193 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கன்னியாகுமரியை நோக்கி நகர்ந்து வருவதால் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்யத் தொடங்கி இரவு விடிய விடிய மழை பெய்ததைத் தொடர்ந்து நேற்றும் இரண்டாவது நாளாக மழை கொட்டியது.
இதனால் திண்டுக்கல் காந்தி சந்தை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் காய்கறி கடைகள் சேதமானது. மழை காரணமாக காந்தி சந்தை மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக மாறியது.
திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. மேலும், தாழ்வாக இருக்கும் வகுப்பறைகளுக்குள் மழைநீர் புகுந்தது.
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை பகுதியிலும் மழை பெய்து வருவதால் திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை செல்லும் மலைப்பாதையில் 17–வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று முன்தினம் மாலை பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
மேலும், திண்டுக்கல் – சிறுமலை இடையே நேற்று காலை வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பாதையில் விழுந்த பாறைகளை அகற்றினர். அதேபோல் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மின்சாரம் தடைபட்டது.
அதேபோல் மழையுடன் திடீரென காற்றும் வீசியதால் பழனி மேற்கு கிரிவீதியில் துர்க்கை அம்மன் கோவில் அருகே நின்ற ஆலமரம் வேரோடு சாய்ந்தது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலமரம் பழனி வையாபுரிகுளத்துக்கு, தண்ணீர் செல்லும் கால்வாயின் குறுக்கே விழுந்தது.
இதனால் கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வயல்களுக்குள் புகுந்தது. இதையடுத்து கால்வாயில் வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பல்வேறு இடங்களில் பதிவான மழை:
திண்டுக்கல் – 25.44 மில்லி மீட்டர், வேடசந்தூர் – 24.2 மில்லி மீட்டர், வேடசந்தூர் (புகையிலை ஆராய்ச்சிமையம்) – 24.2 மில்லி மீட்டர், காமாட்சிபுரம் – 24.2 மில்லி மீட்டர், சத்திரப்பட்டி – 24 மில்லி மீட்டர்,
கொடைக்கானல் – 24 மில்லி மீட்டர், கொடைக்கானல் (போட்கிளப்) – 13.5 மில்லி மீட்டர், பழனி – 23 மில்லி மீட்டர், நத்தம் – 6 மில்லி மீட்டர், நிலக்கோட்டை – 5 மில்லி மீட்டர்.
மொத்தம் – 193.54 மில்லி மீட்டர்.