
தருமபுரி
தருமபுரியில் சொட்டு நீர்ப் பாசன அமைப்புகளை ஏற்படுத்த ரூ. 33.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கருத்தரங்கில் ஒன்று நடைப்பெற்றது. அதில், மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது: "தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளிலும் சொட்டு நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்துவது குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் தோட்டக்கலைத் துறை சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
ஊராட்சிக்கு ஐந்து விவசாயிகளைத் தேர்வு செய்து போதிய பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் அனைத்து வகையான காய்கறிகள், பூக்கள், பழ வகைகள், பழக் கன்றுகள் மற்றும் வாசனை திரவிய வகையான மஞ்சள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசன அமைப்பை ஏற்படுத்த ரூ. 33.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4800 ஹெக்டேரில் இந்த அமைப்புகளை ஏற்படுத்த இதுவரை 950 ஹெக்டேர் பரப்புக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. மேலும் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறு - குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கப்படும்.
சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில், மாவட்ட வன அலுவலர் க. திருமால், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ப. அண்ணாமலை, உதவி இயக்குநர் சி. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.