
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் கொட்டித் தீர்க்கும் பலத்த மழையால் அணைகளுக்கு 2900 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள், மக்கள் என மகிழ்ச்சியில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து கூடியுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 4.60 கன அடியாக உயர்ந்துள்ளது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 3.12 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 3.21 அடியாகவும் உயர்ந்துள்ளது. இந்த அணைகளுக்கு மொத்தமாக 2900 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணை ஏற்கெனவே மூடப்பட்டு உள்ள நிலையில் பெருஞ்சாணி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 151 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. மலையோரப் பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளில் இடைவிடாது சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கினாலும், அணைகள், குளங்கள், கிணறுகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் பெருகியது. இதனால் விவசாயிகள், மக்கள் என அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை அளவு:
பேச்சிப்பாறை 57.6 மி.மீ, பெருஞ்சாணி 46.2 மி.மீ, சிற்றாறு 1 - 50 மி.மீ, சிற்றாறு 2 58 மி.மீ, பொய்கை 7.4 மி.மீ, மாம்பழத்துறையாறு 22 மி.மீ, இரணியல் 22 மி.மீ, ஆனைக்கிடங்கு 19.6 மி.மீ, குளச்சல் 15.4 மி.மீ, அடையாமடை 48 மி.மீ,
கோழிப்போர்விளை 32 மி.மீ, முள்ளங்கனாவிளை 42 மி.மீ, புத்தன் அணை 47 மி.மீ, திற்பரப்பு 41.6 மி.மீ, நாகர்கோவில் 7 மி.மீ, பூதப்பாண்டி 8 மி.மீ, சுருளகோடு 38.6 மி.மீ, கன்னிமார் 11.4 மி.மீ, மயிலாடி 8 மி.மீ, கொட்டாரம் 10.82 மி.மீ.