
திருவாரூர்
திருவாரூரில் நேற்று மூன்றாவது நாளாக பெய்துவரும் தொடர் மழையால் மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதிலும், சாலையில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது. நாள் முழுவதும் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைத் தொடங்கி அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதில், திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகிவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, திருவாரூரில் கடந்த 26-ஆம் தேதி பெய்ய தொடங்கிய பலத்த மழை நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. நேற்று காலையிலேயே மழை பெய்யத் தொடங்கியதால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். சாலையில் இருந்த பள்ளங்களில் தேங்கிய மழை நீர் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து பல மணிநேரம் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூரில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு:
மன்னார்குடி - 14 மில்லி மீட்டர் , பாண்டவையாறு தலைப்பு - 14 மில்லி மீட்டர் , நன்னிலம் - 13 மில்லி மீட்டர் , வலங்கைமான் - 9 மில்லி மீட்டர் , முத்துப்பேட்டை - 8 மில்லி மீட்டர் , குடவாசல் - 6 மில்லி மீட்டர் , நீடாமங்கலம் - 5 மில்லி மீட்டர் , திருத்துறைப்பூண்டி - 3 மில்லி மீட்டர் .